×

திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு(40). பாலக்கரை பகுதி பாஜ மண்டல செயலாளராக இருந்த இவர், காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 27ம் தேதி விஜயரகு, காந்திமார்க்கெட் 6ம் எண் கேட்டில் வாகன வசூலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏர்போர்ட் பிலிக்கான் கோயில் தெருவை சேர்ந்த பாபு என்ற மிட்டாய் பாபு(20), அவரது நண்பர் சைக்கோ சங்கர்(25) ஆகியோர் அரிவாளை எடுத்து விஜயரகுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. நாகையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் அவர்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த மிட்டாய் பாபு, சைக்கோ சங்கரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுடர்வேந்தன், சச்சின், உள்பட 3 பேரை கைது செய்த திருச்சி போலீசார் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் ஆணையர் பேட்டி

இந்த நிலையில், திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருச்சி காவல் ஆணையர் வரதராஜீ கூறியுள்ளார். விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது என்றும், விஜயரகு கொலையில் தொடர்புடைய 5 பேரையும் போலீசார் கைது செய்து விட்டதாகவும் ஆணையர் வரதராஜீ தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவின் லவ் ஜிகாதி போல் விஜயரகுவின் பெண்ணுக்கும் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த கொலையானது நடைபெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Trichy, BJP, vijayaraku, killed, detained
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து...